காற்றழுத்த தாழ்வு நீடிக்கிறது கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், நேற்று(நேற்று முன்தினம்) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும்(நேற்றும்) அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 31ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

இதன் காரணமாக,  இன்று வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

1ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் பறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 1ம் தேதி இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: