தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.

நேற்று இரவு கரளவாடி கிராமம் அருகே உள்ள ரங்கசாமி கோவில் பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை தனது தும்பிக்கையால் தள்ளி முறித்து சேதப்படுத்தியது. யானை ஆக்ரோசத்துடன் மின் கம்பத்தை உடைத்து சேதப்படுத்தும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: