குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருநாள் ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற பள்ளி மாணவி

சென்னை:திருப்போரூர் ஒன்றியம், அருங்குன்றம் ஊராட்சியில், ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவராக 5ம் வகுப்பு மாணவி பதவி ஏற்றார். திருப்போரூர் ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவராக அன்பரசு உள்ளார். அருங்குன்றம் ஊராட்சியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இருவர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவராக ஒருநாள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அரையாண்டு தேர்வில் அருங்குன்றம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி நேத்ரா ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், 2ம் இடம் பெற்ற மாணவி ஸ்ரீபிரியதர்ஷினி ஊராட்சி மன்ற துணை தலைவராகவும் ஒருநாள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, குடியரசு தினத்தன்று ஒருநாள் ஊராட்சி மன்றத்தலைவராக பொறுப்பேற்ற மாணவி நேத்ரா ஊராட்சி மன்ற வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திற்கு மாணவி நேத்ரா அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக மாணவி நேத்ராவும், துணை தலைவராக மாணவி ஸ்ரீபிரியதர்ஷினியும் கலந்து கொண்டு சுகாதாரப் பணியாளர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். கூட்டத்தில், அருங்குன்றம் கிராமமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்து பேசினர். திரைப்படம் ஒன்றில் நடிகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக வேடமேற்று நடித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார். அதுபோன்று, பள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று பல்வேறு பணிகளை செய்ததை அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

Related Stories: