காதலியுடன் வாக்குவாதம் காரணமாக ரூ.70 லட்சம் சொகுசு காரை தீவைத்து எரித்த காதலன்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கவின் (28). இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இவருக்கும், அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு சென்ற கவின், செல்போனில் காதலை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியை பார்ப்பதற்காக கவின் நேற்று முன்தினம் மாலை தனது சொகுசு காரில் தர்மபுரியில் இருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். பின்னர், காதலி காவ்யாவுடன் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் குளக்கரை பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவின், கோபத்தில் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். குளக்கரை அருகே கார் ஒன்று எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: