சவுகார்பேட்டை பகுதியில் சோதனை 2 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடைகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த, கடை குடோனுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்க மேற்கொண்டனர். மேலும், 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தம் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, பாரிமுனை, சவுகார்பேட்டை, பூக்கடை பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டல சுகாதார நல அலுவலர் வேல்முருகன் தலைமையில், சுகாதார அதிகாரிகள் மாப்பிள்ளை துரை சீனிவாசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இஸ்மாயில் சிவபாலன் கவுஷிக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தங்கசாலை, சவுகார்பேட்டை, நாராயண முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குடோன்கள், 100க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டீ கப், வாழை இலை ஆகியவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், 30 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்து குடோன் கடைகளுக்கு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர். மொத்தம் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, தொடர்ந்து இதுபோல் விற்பனை செய்தால் கடை உரிமையை ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதனால், சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: