பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு கண்காணிக்க நிதித்துறை சார்பில் புதிய வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிதியிலிருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, இயந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், வெப் 3.0, ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும். மேலும், தமிழ்நாடு அரசின் நிதித்துறை மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் இந்த நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.50 கோடியை அரசு முதலீடு செய்துள்ளது. மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டைட்டல் பூங்கா ஆகியவை ரூ.50 கோடி முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியமானது, அதன் நிதியை 2023-24ம் நிதியாண்டில் ரூ.500 கோடி உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடு அனுமதி கடிதங்களை வழங்கி உள்ளார். அதன்படி, பெரம்பலூரை சேர்ந்த இ-சந்தை நிறுவனம் தமிழகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிக்க இணையச் சந்தை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து இ-சந்தையில் முதலீடு செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கலை சேர்ந்த கைகள் நிறுவனம் இணைய அடிப்படையிலான டிஜிட்டல் தளம் மூலம் அடிப்படை தொழிலாளரையும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இணைக்கிறது.

இந்த இணையதளம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து கைகள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள பிளானிடிக்ஸ் நிறுவனம், சுகாதாரத் துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள விநியோக சங்கிலியை திட்டமிடவும், இருப்புக் கணக்கினை நிர்வகிக்கவும் மென்பொருளினை உருவாக்கி நடத்தி வருகிறது.

இந்த நிதியிலிருந்து பிளானிடிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேயிலை தோட்டங்களில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய தேயிலை அறுவடை செய்யும் தானியங்கி இயந்திரத்தை சூரிநோவா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற விலை உயர்ந்த மருந்துகளை மலிவான விலைகளில் இணையம் மூலம் வழங்க ஒரு டிஜிட்டல் தளத்தை மிஸ்டர் மெட் நிறுவனம் உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக நிதித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை” www.ccfms.tn.gov.in என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், விதிமீறல்களை அடையாளம் காணவும், அந்தந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய அலுவலர்களுக்கு தானியங்கி எச்சரிக்கை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும், அதன்மூலம் அத்தகைய விதிமீறல்களை சரிசெய்யும் வகையிலும் நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Related Stories: