அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னை: அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.280 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஆண்டு இறுதி வாரத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அதே நேரத்தில் கடந்த 28 மாதத்திற்கு பிறகு மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டியது. 14ம் தேதி சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் தங்கம் விலை ரூ.42,368க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த ஜெட் வேக விலை உயர்வு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை 43 ஆயிரத்தை கடந்தது. கடந்த 2020 ஆகஸ்ட் 7ம் தேதி சவரன் ரூ.43,328க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு தங்கத்தின் தேவை, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பே காரணம் என்று கூறப்பட்டது. இப்படியே விலை உயர்ந்தால் இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை கிராம் ரூ.6000, சவரன் ரூ.48 ஆயிரத்தை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது. நேற்று தங்கம் விலை குறைவை சந்தித்தது. அதாவது, நேற்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: