ஜூடோ பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு: பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் நாயகன் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (46), திருவல்லிக்கேணி பாரதி சாலையில் நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (22). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து ‘ஜூடோ’ பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு லோகேஷ் வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. பிறகு அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த லோகேசின் பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் செந்தில் குமார் புகார் அளித்தார். போலீசார் கல்லூரி மாணவன் லோகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டினப்பாக்கம் கடற்கரையில் வாலிபர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதேநேரம், மாயமான லோகேஷ் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார், பட்டினப்பாக்கம் போலீசாருக்கு புகைப்படத்துடன் தகவல் அளித்திருந்தனர்.

ஐஸ்அவுஸ் போலீசார் அளித்த புகைப்படத்துடன், பட்டினப்பாக்கம் போலீசார் இறந்த நிலையில் மீட்கப்பட்ட வாலிபருடன் ஒப்பிட்டுபார்த்த போது, இறந்த நபர் லோகேஷ் என தெரியவந்தது.

சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், கல்லூரி மாணவனின் பெற்றோர், ஜூடோ பயிற்சிக்கு சென்ற மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மகன் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் கல்லூரி மாணவன் இறப்பு குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: