காயமடைந்தவரை மீட்டு சென்ற போது ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து அமெரிக்க போதை வாலிபர் ரகளை: ஒரு மணி நேரம் போலீசாருக்கு ஆட்டம் காட்டியதால் பரபரப்பு

சென்னை: பெரியமேடு பகுதியில் தலையில் காயமடைந்த அமெரிக்க வாலிபரை ஒருவரை மீட்க சென்ற போது, 108 ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஞானி மக்காரியோ (26) என்பவர், கடந்த 3 நாட்களாக அறை எடுத்து தங்கியுள்ளார். இவர், சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் திருமணத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு நண்பன் திருமணத்தின் போது நடந்த மதுவிருந்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். அதிகளவில் மது குடித்த அவர் போதையில் தனது விடுதிக்கு வந்துள்ளார்.

போதையில் நடக்க முடியாத நிலையில் இருந்தவரை, விடுதியில் இருந்த காஜா மொய்தீன் என்பவர் மீட்டு அவரது அறை எண் 207ல் விட்டுவிட்டு வந்துள்ளார். பிறகு சிறிது நேரத்தில் ஞானி மக்காரியோ தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் தனது அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை பார்த்து விடுதியில் இருந்தவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ற போது, போதையில் இருந்த ஞானி மக்காரியோ, திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆம்புலன்சின் பின் பக்க கண்ணாடியை உடைத்து ஓடும் ஆம்புலன்சில் இருந்து குதித்தார்.

இதில் அவருக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த பெரியமேடு போலீசார் போதையில் ஞானி மக்காரியோவை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர், ரத்த காயத்துடன் போதையில் போலீசாரிடம் சிக்காமல் ரிப்பன் மாளிகை வழியாக சுவர் ஏறி குதித்து அல்லிக்குளம் கார் பார்க்கிங் பகுதியில் பதுங்கி கொண்டார். பின் தொடர்ந்து வந்த போலீசார், ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு ஞானி மாக்காரியோவை பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். போதையில் அமெரிக்க வாலிபர் ஒருவர் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்துவிட்டு அங்கும் இங்கும் ஓடி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரியமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: