தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்: ஆளுநர் உத்தரவு என தகவல்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களை செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம், அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை.  

இது சம்பந்தமாக, உங்கள் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நீங்கள் நியமிக்க வேண்டும். பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு, அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு பெல்லோஷிப் வழங்கப்படும்.

அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழாஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து  அவ்வப்போது தனக்கு விளக்கமளிக்கும்படியும் ஆளுநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: