பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளுக்கு தடை: நகராட்சி ஆணையர் அறிவிப்பு

பழனி: பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிச. 25ம் தேதி நடந்தது. கடந்த 18ம் தேதி பூர்வாங்க பூஜை துவங்கியது. இதைத்தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதையொட்டி இன்று 5.30 மணிக்கு படிப்பாதையில் உள்ள பாதவிநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடந்தது. தொடர்ந்து காலை 9.50 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புண்ணிய நிதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், பாதவிநாயகர், சேத்ரபாலர், சண்டிகாதேவி, இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் முதலான உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மலைக்கோயிலில் காலை 8 மணிக்கு 6ம் கால வேள்வி நடந்தது. மாலை 5.30 மணிக்கு 7ம் கால வேள்வி நடந்தது. இரவு 8.30 மணிக்கு நிறைவேள்வி, நறும்புகை, விளக்கு, படையல், திருவொளி வழிபாடு, தூமொழி பொழிதல், பன்னிருதிருமுறை விண்ணப்பம் போன்றவை நடக்கிறது. நாளை காலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வி துவங்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நடைபெறும். நாளை காலை 8.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இறைச்சி கடைகளுக்கு தடை

இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற நாளை (ஜன.27) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு கோழி, ஆடு, மீன் மற்றும் மாடுகளை வதைசெய்வதும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்க்க, வதைசெய்ய அனுமதியில்லை). எனவே, பழநி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கோழி, ஆடு, மீன் மற்றும் மாடு இறைச்சிக்கடைகளை மூடும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பழநி நகராட்சியால் செயல்பட்டுவரும் ஆட்டிறைச்சி கூடம் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த உத்தரவை மீறிசெயல்படுபவர்கள் மீது நகராட்சி மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

ட்ரோன் பறக்க தடை

நாளை மலைக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழநியில் ட்ரோன் காமிராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதுதாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் சாலை மார்க்கமாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பழநி நகருக்குள் செல்வதற்கு இலவச அரசு டவுன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: