ஆளுநர் மாளிகையில் 74வது குடியரசு தின விழா தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு; ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்கவில்லை..!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் காலையில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். அன்று மாலையில், சென்னை, கிண்டியில் உள்ள தன்னுடைய மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

அதன்படி, இந்தாண்டும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் நேற்று மாலை தொடர்பு கொண்டு, இன்று மாலை குடியரசு தின விழாவுக்காக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநரின் செயலாளர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் வழங்கினார். இந்நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஆளுனருடன் சிறிது நேரம் உரையாடினார். முதல்வர் உரையாடிய போது துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, இடதுசாரிகள், விசிக, தவாக, உள்ளிட்ட காட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஓபிஎஸ் - இபிஎஸ் பங்கேற்கவில்லை

ஆளுநர் தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

Related Stories: