திமுக இளைஞர் அணி பதவிக்கான நிர்வாகிகளுடன் நேர்காணல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை பொறுப்புக்கான நேர்காணல் மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அன்பகத்தில் நேற்று நடந்தது. திமுக பொதுக்குழுவுக்கு பிறகு ஒவ்ெவாரு அணிகளிலும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக நியமிக்கப்பட்டார். இதன் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணியில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதில் மண்டலம் 1ல் உள்ள சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு(அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள்) பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று சென்னை அன்பகத்தில் இளைஞர் அணி நேர்காணல் நடந்தது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் தொடங்கியது. இதில் இளைஞர் அணியை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நேர்காணலில் கலந்து கொள்ள வந்த விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, திமுக உறுப்பினர் அட்டை, இளைஞர் அணி போன்ற திமுக அமைப்புகளில் ஏற்கனவே பணியாற்றியிருந்தால் அது தொடர்பான புகைப்பட தொகுப்பு மற்றும் ஆவணங்களை கொண்டு வந்திருந்தனர். அவைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது.தொடர்ந்து மண்டலம் 2ல் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு மவட்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 30ம் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை அன்பகத்தில் நடைபெறுகிறது. நேர்காணல் முடிந்ததும் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பார்.

Related Stories: