கூட்டணி கட்சிகள் மவுனம்; சின்னம் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்: வேட்பாளர் கிடைக்காமல் இபிஎஸ், ஓபிஎஸ் அணி திணறல்

சென்னை: பாஜ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இடைத்தேர்தல் தொடர்பாக மவுனம் காப்பது, இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், இரு அணியிலும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்ய முடியாமல் இரண்டு தரப்பும் திணறி வருகிறது. இது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். 3 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதேநேரத்தில், தற்போது அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகள் என்ற முறையில் நேரடியாக உரிமை கேட்டு போராடி வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக இருவரும் காத்திருக்கின்றனர். டிடிவி தினகரன் மட்டும் அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், வருகிற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த முடிவு செய்தனர். அவரும் சம்மதித்திருந்தார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகாவோ ‘சீட்டு’ கேட்டு எடப்பாடியை சந்தித்தது. ஆனால், தாங்களே போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியதால், அவரும் விட்டுக் கொடுத்தார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அணியினர், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமியே நேரடியாக அண்ணாமலையிடம் போனில் பேசி ஆதரவு கேட்டார். அவரும்ஆதரவு தருவதாக சம்மதித்தார். அதிமுக நிர்வாகிகள், பாஜ தலைமை கழகத்துக்கு வந்தவுடன், ஆதரவு தருவதாக அண்ணாமலை கூறியிருந்தார். இந்தநிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில், திடீர் திருப்பமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், மேற்கு மண்டலத்தில் பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு இல்லாததால் அவர் போட்டியிட மாட்டார் என்று எடப்பாடி கணக்குப் போட்டார். ஆனால், பன்னீர்செல்வமோ யாரும் எதிர்பாராத விதமாக போட்டி உறுதி என்று கூறிவிட்டார். தனக்குத்தான் இரட்டை இலை கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆலோசனைகளை தீவிரப்படுத்தி உள்ளார். அதிமுகவில் இரு அணியினரும் இரட்டை இலை கேட்டு நிற்பதால், இருவருக்கும் சின்னம் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், இரு வரும் தனித்துப் போட்டியிடுகின்றனர்.

அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை எடப்பாடியை ஆதரிக்க முடியாது. பாஜ என்ன நிலை எடுக்கிறதோ அதுதான் எங்கள் நிலை என்று கூறிவிட்டனர். ஆனால், ஆதரவு தருவதாக கூறியிருந்த அண்ணாமலை, பன்னீர்செல்வம் அறிவிப்பை அடுத்து ஆதரவு தெரிவிப்பதை தள்ளி வைத்து விட்டார். அவர் என்ன நிலை எடுப்பது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். இதனால் எடப்பாடி அணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலரும் இப்போது பின்வாங்க ஆரம்பித்து விட்டனர். கே.வி.ராமலிங்கம்தான் வேட்பாளர் என்று கூறப்பட்டு, வேலைகளும் தொடங்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது அவர் போட்டியிட மறுத்து விட்டார். முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதால்,  அதிமுக நிர்வாகிகள் பலரும் சீட் கேட்க தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், விருப்ப மனு கொடுக்கலாம் என்ற எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேநேரத்தில் பன்னீர்செல்வமும், முதலியார் சமூக இயக்கத்தில் உள்ள ஒருவரை நிறுத்த ஆலோசித்து வருகிறார். அல்லது ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இருவரும் வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் ஏசி சண்முகத்தைச் சந்தித்து பன்னீர்செல்வம் நேற்று ஆதரவு கேட்டார். அவரும் பாஜ முடிவுதான் என் முடிவு. ஆனால் இரு தலைவர்களும் சமரசமாக செல்ல, தான் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறினார்.

ஆனாலும், இருவரும் தனியாக போட்டியிடுவதில் உறுதியாக உள்ளனர். அவர்கள், உறுதியாக இருந்தாலும் நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு, இரு அணியிலும் வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இந்த தேர்தல் குறித்து சசிகலா இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் இந்த தேர்தலில் தனது பங்களிப்பை காட்டாமல் உள்ளார். அதேநேரத்தில் அமமுக தொடங்கியுள்ள டிடிவி தினகரன் தானே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் வேட்பாளர் கிடைக்காமல் திணறும் சூழ்நிலை தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.

* பாஜ ஆதரவு நிலையில் உள்ள சில கட்சிகள் தற்போது அதிமுகவின் இரு அணிகளுக்கும் ஆதரவு தர தயக்கம்  காட்டி வருகின்றன.

* எடப்பாடி அணியில் போட்டியிட விருப்பம்  தெரிவித்த பலரும் இப்போது பின்வாங்க ஆரம்பித்து விட்டனர்.

* போட்டியிட்டால் தோல்வி  உறுதி. டெபாசிட் கிடைக்காவிட்டால், கட்சியில் மட்டுமல்ல  உள்ளூரிலும் அசிங்கப்பட  வேண்டி வரும் என நினைத்து அதிமுகவில் சீட் கேட்க யாரும்  முன் வரவில்லை.

Related Stories: