நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற நிலைப்பாட்டில் ரூ.76.4 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகளில் 18 வார்டுகள் முழுவதும், 17 வார்டுகளில் பகுதியாகவும் பாதாள சாக்கடை பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. தற்போது பணிகள் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது.
இன்னும் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது. மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின், தற்போது தான் பணிகள் வேகமெடுக்க தொடங்கியது. பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ.17 கோடியிலும், பறக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் ரூ.6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கழிவுநீரோடைகள் செல்லும் குறுகலான தெருக்களிலும் பணி செய்ய வேண்டியுள்ளது. குழாய்கள் அமைக்கப்படவுள்ள தெருக்கள் அனைத்தும் தனியார் நிலம் என கூறப்படுகிறது. இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாதாளசாக்கடை பணிக்கு சாலையில் பள்ளம் தோண்ட காவல்துறை அனுமதி வழங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ரூ.76.04 கோடியில் பாதாளசாக்கடை பணி தொடங்கியது. தற்போது ரூ.110.51 கோடியில் பணியை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு வெளியேற்றப்படவுள்ளது. இந்த தண்ணீரை வட்டவிளை சானலில் விட முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. வட்டவிளை சானலில் விடாமல், வலம்புரிவிளை சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெங்கம்புதூர் சானலில்விட மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.9 கோடியில் வலம்புரிவிளை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெங்கம்புதூர் சானல் வரை குழாய் பதிக்கப்படவுள்ளது. இந்த பணியும் பாதாளசாக்கடை திட்ட மதிப்பீட்டில் இருந்துதான் நடக்கவுள்ளது. பாதாள சாக்கடை பணி சுமார் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது புத்தன் அணை குடிநீர் திட்டத்திற்கு பணி நடந்து வருகிறது. குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்ததும், பாதாள சாக்கடை பணியில் ஆர்வம் காட்டப்படும். 2023 ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றனர்.