சபரிமலை சீசன் முடிவடைந்ததால் பொள்ளாச்சி சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு: கேரள வியாபாரிகள் குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: சபரிமலை சீசன் முடிவடைந்ததால் பொள்ளாச்சி சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகரித்தது. கேரள வியாபாரிகள் குவிந்ததால் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். சந்தைநாளில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மழை குறைவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டன.

ஆனால் அப்போது சபரிமலை சீசன் என்பதால், கேரள வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால் பெரும்பாலான மாடுகள், உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கு குறைவான விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தய வாரத்தில் மட்டும் ஓரளவு விற்பனையானது. இன்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் 1700க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது சபரிமலை சீசன் நிறைவால், கேரள வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மாடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. கூடுதல் விலைக்கும் விற்பனையானது.

கடந்த வாரத்தில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையான காளை மாடு, இன்று ரூ.48 ஆயிரம் வரையிலும். ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனையான பசுமாடு ரூ.38 ஆயிரம் வரையிலும். ரூ.28 ஆயிரத்துக்கு விற்பனையான எருமை மாடு ரூ.43 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. வரும் வாரங்களில் மாடு விற்பனை இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: