செங்கல்பட்டில் பழமையான மணிக்கூண்டு ரூ13 லட்சத்தில் புதுப்பிப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாளை திறக்கிறார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பழமையான மணிக்கூண்டு நவீன வசதிகளுடன் ரூ13 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை நாளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். செங்கல்பட்டு  நகராட்சியாக  துவங்கப்பட்டு 123 வருடங்கள் முடிகிறது. ஆங்கிலேயர் காலத்திலேயே செங்கல்பட்டு நகராட்சியாகவும், மாவட்ட தலைமையிடமாகவும் நீதிமன்றத்தின் தலைமையிடமாகவும்  விளங்கியது. செங்கல்பட்டு  நகராட்சி தலைவராக செங்கல்பட்டை சேர்ந்த வேதாச்சலம் முதலியார் பதவி வகித்தபோது 1953ம் ஆண்டு, நகராட்சியின் மையப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு ரயில்நிலைய நுழைவாயில் எதிரே நான்கு புறமும் நேரம் பார்க்கும் வகையில் பெரிய அளவில் மணிக்கூண்டு கட்டப்பட்டது.

தற்போது மணிக்கூண்டு பொலிவை இழந்து கடிகாரம் பழுதாகி நேரம் காட்டவில்லை. பல்வேறு தரப்பினர் மணிக்கூண்டை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் மணிக்கூண்டை புதுப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பெருநிறுவனங்களின் பங்களிப்பு நிதி உதவியுடன் ரூ13 லட்சம் செலவில் கடந்த ஒரு மாதமாக மணிக்கூண்டு சீரமைப்பு பணி நடந்து வந்தது. புதிதாக புனரமைக்கப்படும் மணிக்கூண்டை சுற்றிலும் மதில் சுவர், இரவு நேரங்களில் மணிபார்க்கும் வசதி, எல்இடி பல்ப்கள் இரவு, பகலில் எரியும் அளவில்  அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மணி நேரத்துக்கு பிறகு துல்லியமான நேரம் சொல்லப்பட்டு, திருக்குறளும் அதன் பொருள்விளக்கமும் சொல்லும் வகையில் ஒளி (ஆடியோ வசதி) அமைக்கப்பட்டுள்ளது. பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு நாளை(25ம் தேதி)  திறக்கப்பட உள்ளது. நகராட்சி தலைவர், எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைக்கிறார்.

Related Stories: