சமூக சேவகர் கொலை வழக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 பேருக்கு ஆயுள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் சாலை ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ்மோகன்சந்திரா (55). சமூக சேவகர். மேலும், பல்வேறு பொது நலன் வழக்குகளையும் தாக்கல் செய்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2.7.2012 காலை 6 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிங்கமுக தீர்த்தம் அருகே பைக்கில் சென்ற ராஜ்மோகன் சந்திராவை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன், அவரது தந்தை வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி மற்றும் நண்பர்கள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) இருசன் பூங்குழலி விசாரித்து, வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். வழக்கு விசாரணையின்போதே முன்னாள் கவுன்சிலரின் தந்தை வீராசாமி மற்றும் செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: