ஊதிய திருத்த குழுவின் பணி விரைவில் தொடங்குகிறது: வேளாண் துறை அறிவிப்பு

சென்னை: வேளாண் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், 22 தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்துடன்  செய்து கொண்ட ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவ்வப்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 2,346 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2018 செப்.30 தேதியுடன் காலாவதியானது. இந்நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு பல்வேறு தொழிற் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.    

அதன்படி, கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பான நீண்ட நாள் கோரிக்கையினை அரசு பரிசீலித்து, சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்வதற்காக  சர்க்கரைத் துறை கூடுதல்  ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கடந்த 10ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் நிதித் துறை, வேளாண் துறை மற்றும் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தைச் சார்ந்த 7 அலுவலர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சர்க்கரை ஆலைப் பணியாளர்களின் நலனுக்காக அரசு அமைத்துள்ள ஊதிய திருத்தக் குழு பணிகளாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தினை அமல்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் சங்கங்களிடமிருந்து கருத்துக்களை கேட்க உள்ளது. மேலும், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் பணியாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்த ஊதிய திருத்தக் குழு விரைவில் தனது பணியை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: