நாகர்கோவிலில் குடியரசு தின கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை: 450 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையில் 450 மாணவ மாணவியர் பங்கேற்றனர். நாடு முழுவதும் இந்திய குடியரசு  தினவிழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் 26ம் தேதி நடக்கிறது. விழாவில்  கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்கிறார். விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் அவர்களது பள்ளிகளில்  கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் டதி பள்ளியில் இன்று காலையில் நடந்த ஒத்திகையில் மாவட்டத்தில் உள்ள 6 பள்ளிகளை சேர்ந்த 450 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உட்பட அதிகாரிகள் ஒத்திகையை பார்வையிட்டனர். இதனை போன்று குடியரசு தினத்தன்று போலீஸ் அணி வகுப்பில் பங்கேற்கும் போலீசார் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல்  காரணமாக கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசு தினவிழா விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற அண்ணா விளையாட்டு அரங்கம் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட  இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் பலத்த சோதனைகள் நடந்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: