தமிழ்நாடு சட்டப்பேரவையின் தாக்கம் கேரளாவில் எதிரொலி: கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்தார்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆரிப் முகமதுகான் சட்டப்பேரவையில் அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடும் ஒன்றிய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்தே பினராய் விஜயன் தலைமையிலான அரசுடன் ஆரிப் முகமதுகான் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமித்தல் கேரள அரசு மற்றும் ஆளுநர் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. ஆளுநர் நடவடிக்கைகளை கண்டித்து ஆளும் இடதுசாரிகள் கூட்டணி போராட்டங்களிலும் ஈடுபட்டது.

பல்கலைக்கழக வேந்தர் பதிவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமதுகானை நீக்கி கடந்த டிசம்பரில் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் பினராய் விஜயன் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் எந்த மாற்றமுமின்றி அப்படியே முழுமையாக வாசித்தார். மாநில அரசின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஆளுநர் உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வலிமையான தேசம் அமைய மாநிலங்கள் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்ததும், கடும் கண்டனத்திற்குள்ளானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளின் எதிரொலியாக கேரள சட்டசபையில் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: