கேரளாவை அச்சுறுத்திய பிடி-7 யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் தோணி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த பிடி-7  என்கிற காட்டுயானையை வனத்துறையினர் நேற்று மயக்கஊசி செலுத்திப்பிடித்து  கூண்டிற்குள் அடைத்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்  தோணி, அகத்தேத்தரை, முண்டூர், மலம்புழா மற்றும் கஞ்சிக்கோடு ஆகிய  இடங்களிலுள்ள மலையடிவார பகுதியில்  பிடி-7 என்ற ஒற்றை யானை, ஊருக்குள்  புகுந்து தோட்ட பயிர்களை துவம்சம் செய்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற  முடியாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே அந்த யானை அச்சுறுத்தி வந்தது.  யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும் பாலக்காடு  டிஎப்ஓ அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து  வயநாட்டிலிருந்து கால்நடை மருத்துவர் அருண்சக்கிரியா தலைமையில் 3 கும்கிகள்  உதவியுடன் 50 பேர் கொண்ட குழுவினர் பிடி-7 யானை பிடிப்பதற்கு தீவிர  முயற்சியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். ஆனால் யானை சிக்காமல் போக்கு  காட்டியது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு யானை நடமாடும் பகுதியை  உறுதி செய்தனர்.  பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  தொடர்ந்து யானை 3 மணி நேரம் மயக்கத்தில் இருந்தது.

வனத்துறை காவலர்கள்  யானையின் கண்ணை கறுப்புத்துணியில் கட்டி, நான்கு கால்களில் கயிறு கட்டி  விக்ரம், பரத், சுரேந்திரன் என்ற 3 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில்  ஏற்றி தோணி வனத்துறை செக்‌ஷன் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு  அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்கூண்டில் யானை அடைக்கப்பட்டது. கூண்டில்  அடைக்கப்பட்டுள்ள யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை  அளித்து கும்கி யானைகள் உதவியுடன் கும்கி யானையாக மாற்றும் முயற்சியில்  ஈடுப்பட்டுள்ளனர்.

பிடி-7 என்ற யானையை பிடித்த பாலக்காடு மற்றும்  வயநாடு வனத்துறையினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தோணி வனத்துறை  செக்‌ஷன் அலுவலகத்திற்கு ஊர்மக்கள் திரளாக வந்து பிடி-7 பார்த்து  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: