கிழக்கு காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு, குளிர் காற்று மற்றும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மலைப் பகுதிகளில் உறைபனியும் நீடித்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கு கடல் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி உருவாகி வடக்கு இலங்கையிலும் பரவியுள்ளது. அதனால், அந்த பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, கிழக்கு திசையில் இருந்து வீசி வரும் காற்றின் திசை வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் மேல் மேகக் கூட்டம் பரவியுள்ளது. இதனால், பொதுவான மேகமூட்டம் நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை நேற்று பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  இன்று ஓரிரு இடங்களில் லேசான, மிதமான, மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு  இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. இதே நிலை 26ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால், மீனவர்கள் இன்று அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: