திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிகளவு பக்தர்கள் வருகையால் தினமும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருமலையில் விமானங்கள் பறக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த தடை மற்றும் பலத்த பாதுகாப்பை மீறி ஏழுமலையான் கோயில் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐகான் என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் இருந்து வந்தவர்கள் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவு செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வீடியோ, ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்டதா அல்லது கூகுளில் இருந்து சேகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. ஏழுமலையான் கோயில் மீது பாதுகாப்பை மீறி ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்க முடியாது. எனவே தடயவியல் ஆய்வு முடிவுக்கு பிறகு உண்மை கண்டறியப் பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா கூறியதாவது: ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திரப்படி கோயில் மீது விமானம், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்க முடியாது.

 ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக விஜிலென்ஸ், பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டதா, பழைய புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு 3டி முறையில் மாற்றப்பட்டதா என்பது தடயவியல் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் தெரியவரும். இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த காணொலி குறித்து முழு விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு உண்மைகளை தெரிவிப்போம். இவ்வாறு கூறினார்.

Related Stories: