அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சிறந்த உள்கட்டமைப்பு, சர்வதேச தரத்தில் பயிற்சி

சென்னை: ஒடிசா மாநில விளையாட்டு துறை அமைச்சகத்துடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இரு மாநிலங்களும் இணைந்து, உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 15வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் ஒடிசா மாநில விளையாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது, இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும். இதனால் உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமி, விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும். இந்த நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டர்கி, பொருளாளர் சேகர் மனோகரன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட பலர் உடனிருந்தனர்.

* ‘ஜகா மிஷன் திட்ட’ குடிநீர் திட்டப்பணிகளை பார்வை

புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்து, விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளையும் பார்வையிட்டார். மேலும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிற ‘மிஷன் சக்தி திட்டம்’ குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் அருகில் உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனி கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் ‘குழாய் மூலம் குடிநீர்’ திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவி குழுவினர் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடியபோது ‘சமுதாய வளர்ச்சி என்பது மகளிர் கையில் மட்டுமே உள்ளது’’ என தெரிவித்தார்.

Related Stories: