மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 53வது வார்டுக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர், காட்பாடா பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 1,044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லாததால், புதிதாக ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஐட்ரீம் மூர்த்தியிடம் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், சென்னை மாநகராட்சி சார்பில், அந்த பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை  நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது, இந்த ஆரம்ப சுகாதார மையத்தை 6 மாதங்களுக்கு கட்டி முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து, அங்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெறும் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய பூங்கா பணிகளையும் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, 5வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பே.சுரேஷ், 53வது வார்டு உறுப்பினர் வேளாங்கண்ணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: