பிரம்மபுத்திராவை கபளீகரம் செய்ய பிரமாண்ட அணை தண்ணீர் யுத்தத்திற்கு தயாராகும் சீனா: அருணாச்சலில் அணை கட்டி பதிலடி தர இந்தியா மும்முரம்

புதுடெல்லி: பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் தண்ணீரை கபளீகரம் செய்ய எல்லையை ஒட்டி சீனா புதிய அணைகளை கட்டி வரும் செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா, சீனா இடையே வரையறுக்கப்படாத அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறி குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக இந்தியாவுடன் தண்ணீர் யுத்தத்திற்கு சீனா தயாராகி வருகிறது. அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகே திபெத்தின் மேடாக் பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு பிரமாண்டமான அணையை கட்டி வருவதாக செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த அணை கட்டும் பணி 2021ல் தொடங்கப்பட்டுள்ளது.  பிரம்மபுத்திரா ஆசியாவின் வற்றாத ஜீவநதியாகும். திபெத்தின் இமயமலையில் உருவாகும் இந்த நதியின் 50 சதவீத பகுதி சீன எல்லைக்குள் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வங்கதேசத்தின் நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.  இந்த ஆற்றின் குறுக்கே சீனா அணை கட்டுவதன் மூலம் மொத்த தண்ணீரையும் கபளீகரம் செய்ய திட்டமிட்டுள்ளது. அணை மூலமாக பிரம்மபுத்திரா நதியை சீனா திசை திருப்பினால், இந்தியாவில் அருணாச்சல், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, சீனா திடீரென அணையை திறந்தால், அருணாச்சல் மொத்தமும் மூழ்கும் அபாயமும் உள்ளது.

இதுமட்டுமின்றி, இந்தியா, நேபாளம், சீனா எல்லைகள் சந்திக்கும் இடத்திலிருந்து சில கிமீ தொலைவில் மப்ஜா ஜங்போ ஆற்றின் குறுக்கேயும் சீனா அணை கட்டி வருகிறது. இந்த ஆறு கங்கையின் துணை நதியாக உள்ளது. இதன் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் நீர் ஆதாரத்தையும் கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவும் அருணாச்சலின் சபன்சிரியில் 11,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையிலான அணையை கட்டத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் பிரம்மபுத்திரா நீரை தேக்கி வைப்பதோடு, திடீரென சீனா அணையை திறந்தாலும் பெரும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும். இதுதவிர மேலும் 3 இடங்களிலும் இந்தியா அணை கட்ட திட்டமிட்டுள்ளது.

Related Stories: