மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப முழுமையாக செயல்பட்டு காவல் நிலையத்துக்கு சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்: சட்டம்-ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: மக்களின் நம்பிக்கைக்கு காவல்துறை முழுமையாக செயல்பட்டு, காவல் நிலையத்திற்கு சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலையை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்க வேண்டும் என்று சட்டம்-ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசின் தலைமையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருவதால், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை மிக அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறது.  

கோயம்புத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களில் நமது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாக செயல்பட்டபோதிலும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க, காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கிடைய மேலும் வலுவான  ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து புதிய தொழில்கள் பெருகும் வகையில், தொழில் அமைதி தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.  

தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தொழில் அமைதிக்கு தனிக்கவனம் செலுத்திட வேண்டும். மாவட்டங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். மாவட்டங்களில் கொலை குற்றங்கள், ஆதாய கொலைகள், கூட்டு கொள்ளைகள், கொள்ளை சம்பவங்கள் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பங்கள் நடைபெறும்போது மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்கு திரும்ப வழங்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும். காவல்துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஈட்டித்தரும். சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், ‘குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில்’ மாவட்ட, மாநகரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும். புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் நடவடிக்கை கோரி அணுகும்போது, அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரை பதிவு செய்து, உரிய மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை தான் காவல் துறையை மக்களுக்கு நண்பனாக்கும்.

மாநில நுண்ணறிவு பிரிவு மற்றும் க்யூ பிரிவில் இருந்து அனுப்பப்படும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் கள விசாரணை செய்து, காவல் துறை தலைமையகத்துடன் முழுமையான ஒருங்கிணைப்போடு காவல் துறை கண்காணிப்பாளர்களும், ஆணையர்களும் செயல்பட வேண்டும். காவல் கண்காணிப்பாளர்கள் களப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், காவல் நிலையங்களுக்கும், துணை காவல் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து, மக்களோடு இணைந்து காவல் துறை அவர்களுக்கு ஓர் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டும்.

ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள், பின்பற்றப்படாத நிகழ்வுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும்.  காவல் நிலையத்திற்கு சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.

Related Stories: