அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: ஆயிரக்கணக்கான காளைகளை அடக்குவதற்கு அணிதிரண்ட வீரர்கள்; இன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது

அலங்காநல்லூர்: மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிகட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கான காளைகள் களமிறங்கின, அவற்றை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்களும் அணி திரண்டனர். உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. பொங்கல் விழா என்றாலே, மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி விடும். பொங்கல் தினத்தன்று முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை, அவனியாபுரத்திலும், மறுநாள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாலமேடு மற்றும் மூன்றாவது நாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் படு அமர்க்களமாக நடக்கும். பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வௌிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான நேற்றுமுன்தினம் அவனியாபுரத்தில் அமர்க்களமாக நடந்தது.

மாட்டுப்பொங்கல் திருநாளான நேற்று, மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது. காலை 7.45 மணியளவில் முதல் நிகழ்ச்சியாக அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், கலெக்டர் அனீஷ்சேகர் உறுதிமொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். முன்னதாக மருத்துவக்குழுவினர், மாடுபிடி வீரர்களின் உடல்தகுதியை பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்தனர்.

கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் குழுவினர், காளைகளை பரிசோதனை செய்து, தகுதிச்சான்றிதழ் வழங்கினர். முதலில் அய்யனார் கோயில், முத்துமாரியம்மன் கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டன.  இவற்றை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முரட்டுக்காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 905 காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 16 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதனால் 889 காளைகள் களத்தில் காலையில் இருந்து சுற்று முறைப்படி இறக்கி விடப்பட்டன.

சுற்றுக்கு 100 பேர் என, காலை 8 மணி முதல், மாடுபிடி வீரர்களும் இறக்கி விடப்பட்டனர். மாலை 4 மணி வரை அடுத்தடுத்த சுற்றுக்களில் மொத்தம் 889 காளைகள் களமிறங்கின. மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டு அவற்றை அடக்கப்பாய்ந்தனர். 335 மாடுபிடி வீரர்களில் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 334 வீரர்கள் களம் இறங்கினர். காளைகளை அடக்கும் முயற்சியில் 32 பேர் காயமடைந்தனர். 9 காளைகளை அடக்கியிருந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் (25), எதிர்பாராதவிதமாக காளை முட்டியதில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், 23 காளைகளை அடக்கி, சாதனை புரிந்த பாலமேடு அருகே சின்னப்பட்டியை சேர்ந்த, காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பிஏ 2ம்  ஆண்டு மாணவர் தமிழரசனுக்கு (20) முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 2வது  பரிசு, பாலமேடு மணிக்கு கிடைத்தது. அவர் 19 காளைகளை பிடித்தார். சிறந்த  காளைக்கான முதல் பரிசு, காளையின் உரிமையாளர் பாலமேடு ரங்கராஜபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30) டூவீலரை பரிசாக பெற்றார்.

பாலமேடு கிழக்குத்தெருவை சேர்ந்த அரவிந்த் ராஜன் (25) முதல் நான்கு சுற்றுக்களில் 9 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தில் இருந்தார். ஐந்தாவது சுற்றில் களமிறங்கிய போது, எதிர்பாராதவிதமாக மாடு முட்டி குடல் சரிந்து கீழே விழுந்தார். பாலமேடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரவிந்த் ராஜன், பாலமேடு விவசாயி ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் 2வது மகன். திருமணம் ஆகாதவர். சென்னையில் கட்டிட வேலை பார்த்து வந்தார். மாடுபிடி வீரரான இவர், பொங்கல் நேரத்தில் சொந்த ஊருக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த முறைதான் அதிகளவு காளைகளை அடக்கி பரிசை நோக்கி முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவனியாபுரம்: பொங்கல் திருநாளான நேற்றுமுன்தினம், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கிவைத்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 737 காளைகள், 12 சுற்றுக்களாக களம் இறக்கிவிடப்பட்டன. 28 காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த விஜய்க்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக்குக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக்கும் பரிசாக வழங்கப்பட்டன.

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு: திருச்சி அடுத்த திருவெறும்பூர் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. 627 காளைகள், 400 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 17 மாடுகளை அடக்கிய திருச்சி பெரிய சூரியரை சேர்ந்த பூபாலன் முதல் பரிசாக டூவீலர் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாடுகள் பாய்ந்ததில் 63 பேர் காயமடைந்தனர்.

மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 11 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பார்வையாளரான பொக்லைன் இயந்திர ஆப்ரேட்டர் புதுக்கோட்டை கண்ணகோடுப்பட்டியை சேர்ந்த அரவிந்த் (25) உயிரிழந்தார். இன்று அலங்காநல்லூர்: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று நடைபெற உள்ளது.100 காளைகளும், 360 மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர். ஜல்லிக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

* ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்தராஜும் (24), சூரியூர்  ஜல்லிக்கட்டில் அரவிந்த் ஆகியோர் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு வேதனை உற்றேன். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

* பாலமேடு ஜல்லிக்கட்டில் மேலும் ஒருவர் பலி

மதுரை  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிரச் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பெரியபுள்ளியான் (54) என்பவர்,  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவரையும் சேர்த்து பாலமேடு  ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

* ‘பரிசுகள் நிரம்பி கிடக்கிறது வாங்கிய மகன் இல்லையே...’ உயிரிழந்த வீரரின் தாய் கதறல்

பாலமேடு ஜல்லிக்கட்டில்அரவிந்த் ராஜன், ஒவ்வொரு சுற்றிலும் காளையை பிடித்ததால், தான் வென்ற பரிசை தாயாரிடம் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தார். 10வது மாட்டை பிடிக்க முயன்ற போது, வயிற்றில் வலதுபுறத்தில் மாடு குத்தியதில் நிலைகுலைந்து விழுந்தார். பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அரவிந்த் ராஜன் இறந்தார். மகனின் இறப்பு செய்தி அறிந்த உடல்நலம் குன்றிய தாயார் தெய்வானை, ‘‘என் மகன் பரிசாக வாங்கிய கிரைண்டர், அண்டா, சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தற்போது வாங்கிய பரிசு பொருட்கள் வீடு முழுவதும் நிரம்பி கிடக்கிறது. ஆனால் என் மகன் இல்லையே...’’ என கூறி கதறி அழுதார். பொதுவாக ஜல்லிக்கட்டு நடக்கும் கிழக்குத்தெரு எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஆனால், அரவிந்த் ராஜன் இறந்த சோகத்தால், கிழக்குத்தெரு பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கி இருந்தது.

Related Stories: