ராகுல் யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற எம்பி சந்தோக் சிங் சவுத்ரி நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில்  பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகின்றது. முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்று இருந்தனர். லூதியானாவின் லதோவாலில் நேற்று காலை ஒற்றுமை யாத்திரை தொடங்கியது. இதில் இரண்டு முறை எம்பியான சந்தோக் சிங் சவுத்ரி கலந்து கொண்டார். ஜலந்தர் அருகே பிலாப்பூர் பகுதியில் யாத்திரை வந்தபோது எம்பி சந்தோக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலமாக பக்வாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து ஒற்றுமை யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. ராகுல்காந்தி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று சந்தோக் சவுத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தோக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த எம்பி சந்தோக் சிங் சவுத்ரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 24மணிநேரத்துக்கு ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. ஜலந்தரில் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டு 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: