பயிற்சிக்காக ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் வீராங்கனையின் உடல் சடலமாக மீட்பு: ஒடிசா கிரிக்கெட் சங்கம் அதிர்ச்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பயிற்சிக்காக ஓட்டலில் தங்கியிருந்த வீராங்கனையின் உடல் சடலமாக மீட்கப்பட்டதால், அம்மாநில கிரிக்கெட் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மங்களாபாக் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜ்ஸ்ரீஸ்வைன் என்பவர் கடந்த 11ம் தேதி மாயமானதாக குருதிஜாதியா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து போலீசார், ராஜ்ஸ்ரீ ஸ்வைனை பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் குருதிஜாதியாயின் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ராஜ்ஸ்ரீயின் உடல் மற்றும் ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்பட்டது; மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் (ஓ.சி.ஏ) சார்பில் ராஜ்ஸ்ரீ ஸ்வைன் பங்கேற்க இருந்தார். அதற்காக பஜ்ரகபதி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி முகாமில் ராஜ்ஸ்ரீ உட்பட சுமார் 25 பெண் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர்.

இதற்கிடையே கடந்த 10ம் தேதி ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் ராஜ்ஸ்ரீயின் பெயர் சேர்க்கப்படவில்லை. அடுத்த நாள், வீராங்கனைகள் அனைவரும் டாங்கி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றனர். ஆனால் ராஜ்ஸ்ரீ தனது தந்தையைச் சந்திப்பதற்காக பூரிக்குச் செல்வதாக தனது பயிற்சியாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குருதிஜாதியா பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் உள்ளன. ராஜ்ஸ்ரீயின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: