தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கும் சட்டமசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது..!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கும் சட்டமசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்தும் மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என வெளியிடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மசோதா மீதான விவாதத்தில் பாமக, விசிக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், இன்றைக்கு இந்த சட்டதிருத்தத்தை கொண்டு வராவிட்டால் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகிவிடும் என்றும் கூறினார். உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

Related Stories: