கடற்கரையில் பொருட்கள் விற்க தடைபோடுவதா? நகராட்சி ஆணையர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை பகுதியில் நரிக்குறவர்கள் விற்பனைக்கு எடுத்து  வந்திருந்த விளையாட்டு பொருட்களை நகராட்சியினர் பறிமுதல் செய்ததை  கண்டித்து நகராட்சி ஆணையர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள கடற்கரை  பகுதிகளில் சிறுவர்களுக்கான பொம்மை மற்றும் பலூன், பிளாஸ்டிக் விளையாட்டு  உபகரணங்களை நரிக்குறவர்கள் விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர். நேற்று  காலை கடற்கரையில் விற்பனைக்காக நரிக்குறவர்கள் வைத்திருந்த பொருட்களை அங்கு  ரோந்துசென்ற புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அதிரடியாக  பறிமுதல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் புதுச்சேரி கம்பன்  கலையரங்கில் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை  திடீரென முற்றுகையிட்டனர். இதில்  நரிக்குறவ பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை  வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும்  வகையில் நகராட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்.   

பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித்தர வேண்டுமென வலியுறுத்தினர். இதனிடையே  நரிக்குறவர்களின் முற்றுகையில் மா. கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்று  ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் குறித்து நரிக்குறவ  பெண்கள் கூறுகையில், நரிக்குறவர்களான நாங்கள்,  வேட்டையாடி பிழைப்பு  நடத்திய நிலையில், தற்போது அவற்றிலிருந்து விடுபட்டு மற்ற மாநிலங்களைபோல்  பொழுதுபோக்கு இடங்களில் பொம்மை மற்றும் சிறுவர் விளையாட்டு பொருட்களை  விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்  புதுச்சேரியில் மட்டும் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம். பறவைகளை வேட்டையாடினால்  அது தவறு என்கிறார்கள்.

அதிலிருந்து விலகி சொந்தமாக ஏதேனும் தொழில் செய்து  பிழைப்பு நடத்தலாம் என்றால் இதற்கும் தடை போடுகிறார்கள். அப்படியென்றால்  நரிக்குறவர்களான எங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது.  என சரமாரி  கேள்வி எழுப்பினர்.இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ ஜாகீர் உசேன் தலைமையிலான  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையரை  சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக முறையிட நரிக்குறவர்கள் அங்கேயே  காத்திருந்தனர்.

Related Stories: