சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கலைஞர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கலைஞர் அவரிடம் வலியுறுத்தினார். 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும்படி கலைஞர் வலியுறுத்தினார்.

அரசியல் காரணத்துக்காக சேது சமுத்திர திட்டம் முடக்கம்:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. 2427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென்று அரசியல் காரணத்துக்காக முடக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் வழி வணிகம் அதிகரிக்கும். தொடக்கத்தில் திட்டத்தை ஆதரித்து வந்த ஜெயலலிதா, திடீரென்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வழக்கு தொடர்ந்தார்.

முட்டுக்கட்டை போட்டது பாஜக:

சேது சமுத்திர திட்டத்துக்கு அரசியல் காரணத்துக்காக முட்டுக்கட்டை போட்டது பாஜக. எந்த காரணத்தை கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கூறி இருக்கிறது. ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். சேது சமுத்திர திட்டத்துக்கான சாத்தியகூறுக்கான ஆய்வுகள் அனுமதி அளித்ததே வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான். பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005ம் ஆண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தென் மாவட்டங்களை செழிக்க வைக்கக்கூடிய திட்டத்துக்கு திடீரென்று முட்டுக்கட்டை போடப்பட்டது.

சேது சமுத்திர திட்டம்: முதலமைச்சர் தனித் தீர்மானம்:

சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாக சட்டப்பேரவை கருதுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திர திட்டம் இருக்கும். தாமதமின்றி முக்கியமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

Related Stories: