பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,330 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைப்பு: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமும் திறப்பு

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிர்பயா திட்டத்தின் கீழ் 2,330 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதற்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நிர்பயா திட்டம்  மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு, நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிக்கும் மகளிர், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சுமார் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் 2,500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்தது. தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2,330 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* அவசர கால பேனிக் பட்டன்

மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 2,330 பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பேனிக் பட்டன்கள் மற்றும் ஒரு ஒலிபெருக்கியும் என மொத்தம் 2,330 மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 6,990 கண்காணிப்பு கேமராக்கள், 9,320 அவசரகால பேனிக் பட்டன்கள் மற்றும் 2,330 ஒலிபெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: