சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தகராறால் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தகராறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் சுமார் 4,760 வழக்கறிஞர்கள் வாக்களிக்க இருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை நடத்த தேர்தல் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீரை நியமித்திருந்தது.   

வாக்கு சீட்டுகளுக்கான கியூஆர் கோடு சீட்டுகள் வெளியே எடுத்து செல்லப்பட்டதால் ஏற்பட்ட தகறாரையடுத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

சில நிமிடங்கள் தேர்தல் சுமூகமான முறையில் நடந்துவந்தது. இந்த நிலையில் வாக்கு சீட்டை பெறுவதற்கான கியுஆர் கோடு சீட்டுகளை சிலர் மொத்தமாக அள்ளி சென்றுள்ளதாக தகவல் வந்தது. இதனால் வாக்கு சாவடியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர்கள் சிலர் வாக்கு சாவடியில் தகராறு செய்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் அடித்து நொறுக்கினர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வழக்கறிர்கள் அங்கு கூடினர். பிரச்னை பெரிய அளவுக்கு மாறியதால் தேர்தல் நடத்தும் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கபீர் தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் குறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்’’ என்றார். 6 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற தேர்தல் தள்ளி வைக்கப்படுவது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: