தாம்பரம் மேற்கு - கிழக்கு இடையே அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்க நடை பாதையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

தாம்பரம்: தாம்பரம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதி, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து மார்க்கெட் பகுதி, காவல் நிலையம், திரையரங்கங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம் என வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிழக்கு - மேற்கு தாம்பரத்தை இணைக்கும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்ட போது, பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள, கார் மற்றும் இருசக்கர வாகனம் செல்லும் சுரங்கப்பாதை வழியாக கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தி வந்தனர். இதில் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தை நடந்து கடந்து வந்தனர். இவ்வாறு ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது பெரும்பாலானோர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. எனவே கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு பொதுமக்கள் நடந்து சென்றுவர வழி செய்யவேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், ஏற்கனவே உள்ள வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதையின் அருகே ரூ.3.85 கோடி செலவில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

ஆனால் அந்த சுரங்க நடைபாதை பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக இல்லை. காரணம், சுரங்க நடைபாதைக்கு செல்ல வேண்டுமென்றால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே ஜிஎஸ்டி சாலையை கடந்து பின்னர் மீண்டும் அரை கிலோ மீட்டர் நடந்தால் மட்டுமே சுரங்க நடைபாதைக்கு செல்ல முடியும். இதனால் எதற்கு சுரங்க நடைபாதையை பயன்படுத்த ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும் என்பதால் பலரும் இந்த சுரங்க நடைபாதையை பயன்படுத்தவில்லை. இதனால், சுரங்க நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நாள் முதல் முறையாக பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. குறிப்பாக, சுரங்க நடைபாதையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பழுதடைந்துள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மது அருந்துவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தும் இடமாக மாறியது.

இதனால், சுரங்க நடைபாதையின் இருபுறமும் உள்ள நுழைவாயில் பகுதிகளை தடுப்புகள் கொண்டு போலீசார் அடைத்து, அறிவிப்பு பலகை வைத்தனர். அதில், இந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளது. இந்த இடத்தில் மது அருந்தினாலோ மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தினாலோ சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ தண்டிக்கப்படுவீர், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை கண்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், இந்த இடத்தில் அசுத்தம் ஏற்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வாசகங்கள் இருந்தது. அதை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க நடைபாதை மூடியே கிடப்பதால், போலீசாரின் எச்சரிக்கையும் மீறி சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த சுரங்கப்பாதையை பராமரிக்கும் பொறுப்பை ரயில்வே துறை, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமார் கூறுகையில், ‘‘பொதுமக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்த வேண்டும் என்றால் சுரங்க நடைபாதையில் இருந்து வெளியேறும் பகுதிக்கு நேரெதிராக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை பொதுமக்கள் கடக்கும் விதமாக வழி செய்ய வேண்டும். இல்லை என்றால் சுரங்க நடைபாதையில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து மறுபுறம் வர செல்ல ஜிஎஸ்டி சாலையின் நடுவே ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். சமூக விரோதிகளால் அசுத்தமாக உள்ள சுரங்க நடைபாதையை முதலில் முழுமையாக சுத்தம் செய்து, மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதோடு, ரயில்வே தண்டவாளங்களை பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு இரு புறமும் மதில்சுவர் அமைத்து பொதுமக்கள் சுரங்க நடைபாதையை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையை எடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் அல்லது தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு சுரங்கப்பாதையை பராமரிக்கும் பணிகள் செய்ய அனுமதி வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு செய்யப்பட்டால் பொதுமக்களும் சுரங்க நடைபாதையை மட்டுமே  பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படாமலும், சுரங்க நடைபாதையில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமலும் இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: