கிருஷ்ணகிரி அருகே பைக் மீது மோதியது கர்நாடகா பஸ் தீப்பிடித்து எரிந்து ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி: 50 பேர் உயிர் தப்பினர்

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று, நேற்று காலை பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தது. கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு என்னுமிடத்தில் வந்தபோது,  ஒட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன் (38), அவரது நண்பர் கணேசன் (35) ஆகியோர், பைக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது, பைக் மீது கர்நாடக அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, அங்கேயே உயிரிழந்தனர்.

 மோதிய வேகத்தில் பஸ்சின் அடியில் பைக் சிக்கியது.  பைக்கின் பெட்ரோல் டேங்க், பஸ்சில் உரசியதால் தீப்பிடித்து பஸ்சுக்குள் தீ பரவியது. உடனடியாக டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள், முன்புறம் மற்றும் பின்புறம் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினர்.

அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள், வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலம் எரிந்து எலும்புக்கூடானது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 50 பயணிகளும், உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: