காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடையை மூடி ஜெயின் சமூகத்தினர் போராட்டம்

காஞ்சிபுரம்: இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும், புண்ணிய தலங்களை ஒன்றிய அரசு காப்பாற்ற கோரியும், நாடு முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் இன்று போராட்டம் செய்து வருகின்றனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கம்மாளர் தெரு, நெல்லுக்கார தெரு, எண்ணக்கார தெரு, சேக்குப்பேட்டை, காந்தி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்களையும் கடைகளையும் நடத்தி வரும் ஜெயின் சமூகத்தினர் புண்ணிய தலங்களை ஒன்றிய அரசு காப்பாற்ற வலியுறுத்தி, தங்களது கடைகளை இன்று ஒரு நாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 இன்று ஒரு நாள் நடக்கும் இந்தப் போராட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில் அவர்கள் கடையை மூடி இது குறித்த போஸ்டர் ஒட்டி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சென்னையில் நடந்த போராட்டத்திற்கு 200-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்திலிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புனித தலங்களையும் புனரமைத்து காப்பாற்றி வரும் ஒன்றிய  அரசு ஜெயின் சமூகத்திற்கு என்று உள்ள இந்த புனித தலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில், சமூக விரோதிகள் இறங்கியுள்ளனர். இதனைக் கண்டறிந்து இந்த ஆலயங்களில் வழிபாட்டிற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி உள்ளனர்.

மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புனித கோயிலை சுற்றுலாத்தலமாக அறிவித்ததால் எங்களது வழிபாட்டு புனிதம் கெடும் வாய்ப்பு உள்ளதாலும், பல்வேறு தீய செயல்களுக்கு இடமளிக்கும் இடமாக மாற வாய்ப்பு உள்ளதால் இதனை ஜார்க்கண்ட் மாநிலம் வாபஸ் பெற்று, மீண்டும் எங்களது வழிபாட்டிற்கு தனித்தன்மையாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இதேபோல் உத்திரமேரூர் , வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் , குன்றத்தூர் , படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் செய்து வரும் ஜெயின் சமூகத்தினர் தங்களது கடையை அடைத்து இன்று ஒரு நாள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Related Stories: