தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 8 மாதமாக செயல்படாத குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம்

* சுற்று வட்டாரம் முழுவதும் துர்நாற்றம்

* பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 8 மாதமாக குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் செயல்பட வில்லை. இதனால் குப்பைகள் குவிந்து சுற்றுவட்டாரம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. உடனே தரம் பிரிக்கும் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு 51 வார்டுகளில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மால்கள், மருத்துவமனைகள் ஆகியவைகளில் கொட்டப்படும் குப்பைகளை தினம் சேகரித்து லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. 51 வார்டுகளில் 120 டன் குப்பைகள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

50 ஆண்டு காலமாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், மலைபோல் குவிந்திருந்த நிலையில் அதற்கு மேல் குப்பை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ரூ.15 கோடியே 43 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து குப்பைகளை தரம் பிரித்து வைக்கக்கூடிய 4 இயந்திரம் குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வந்தது. 2.30 லட்சம் கன மீட்டர் குவிந்திருந்த குப்பை மேட்டை 60 ஆயிரம் கன மீட்டர் குப்பைகள் பயோ மெட்ரிக் மூலம் தரம் பிரித்து குப்பையை சற்று குறைத்திருந்தனர்.

குப்பை கிடங்கில் தேங்கியுள்ள சாக்குகள்,தேங்காய், ரப்பர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், பாலிதீன் பைகள், டயர்கள், நார்கள். துணிமணிகள், கட்டைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் காலனிகள் ஆகியவை தரம் பிரிக்கும் இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு, அரைத்து குப்பையில் மக்கி போன மண்ணை வைத்து இயற்கை உரமாக தயாரித்தனர். கூடுதலாக 4 அலகுகள், அதாவது மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டு, தற்போது 8 இயந்திரம் கடந்த ஜுன் மாதம் வரை செயல்பாட்டில் இருந்து வந்தது.

அதன் பின் எட்டு மாதமாக குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறாமல் மீண்டும் சிறு, சிறு மலைபோல் குப்பை குவிந்து இருக்கிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் இந்த குப்பை கிடங்கு வருவதற்கு முன்னே இங்கு வசித்து வருகிறோம். இந்த குப்பை கிடங்கிலிருந்து மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் சுற்று வட்டாரம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி கோடை காலம் வர இருப்பதால் எந்த நேரத்திலும் தீ பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

மீண்டும் கொட்டாதீர்கள்

மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 8 மாத காலமாக குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான இயந்திரங்களும் துரு பிடித்து ஒரு உயிரற்ற நிலையில் உள்ளது, மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் நகரத்தில் இருந்து கொண்டு வரும் குப்பைகளை மீண்டும் கொட்டாமல் தரம் பிரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: