நெல்லை பேட்டையில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளால் மக்கள் கடும் அவதி

*நிரந்தரத்தீர்வு காணப்படுமா?

பேட்டை : தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெறும் என அமைச்சர் கே.என்.நேரு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படத் தெரிவித்தார். இதையடுத்து அனைத்து இடங்களிலும் ஸ்மார் சிட்டி திட்டப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளும் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

 நெல்லை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை அடுத்து சாலை அமைக்கும் பணியும் துவங்கி பெரும்பாலான இடங்களில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி, டவுன் மண்டலம், பேட்டை பகுதியில் பேட்டை சேரன்மகாதேவி சாலையில் இருந்து ரஹ்மான் பேட்டை ப.த. நகர், ஆசிரியர் காலனி, மையவாடி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஏராளமான தெருக்கள் குறுகிய அளவில் அமைந்துள்ளன.

இத்தெருக்களில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கான குழிகள் தோண்டப்படும்போது அப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவையை பூர்த்திசெய்ய தெருக்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆகிவிடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக மீண்டும் மீண்டும் தோண்டப்படும் குழிகளால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த சாலை பஞ்சராகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற  நிலையில் உள்ளது.

அத்துடன் பாதாள சாக்கடை பணிகளுக்கு ஒரு சில பகுதிகளில் 15 அடிகளுக்கும் மேல் ஆழப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறு ஆழப்படுத்தி கொண்டு செல்லும் போதுதான் சமநிலையில் குறிப்பிட்ட பகுதியில் திட்டத்தை செயல்படுத்த இயலும். மேலும் இப்பகுதிகள் சுக்கம்பாறை பரவி காணப்படுவதால் இதனை வெடிவைத்து தகர்க்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுவதால் இப்பணிகள் மேலும் சுணக்கமடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகி சிரமப்பட்டு வருகின்றனர்.

  எனவே, இதுவிஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு இப்பகுதி மக்களின் அவலநிலை சரிசெய்திட சரியான திட்டமிடலுடன் கூடிய பணிகளை மேற்கொண்டு விரைந்து சீரமைத்து இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண  முன்வருவார்களா? என்பதே வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்

தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: