தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகரிக்க விவசாயிகளிடம் வெல்லம் கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல், குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும்

தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் குறைந்து வரும் கரும்பு சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் நேரடியாக சர்க்கரையை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு கரும்பு சாகுபடி மொத்த சாகுபடி பரப்பில் 25 சதவிகித்திற்கு மேல் இருந்தது. அப்போதைய நிலையில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு அறுவடை செய்த ஒரு மாதத்திற்குள் பணப்பட்டுவாடா செய்துவிடுவார்கள். இதனால் விவசாயிகள் மற்ற பயிர்கள் சாகுபடியில் நோய் தொற்று விலை குறைவு, உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் போதிய அளவு உள்ள நிலங்களில் அதிகப்படியாக கரும்பு சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

பின்னர் படிப்படியாக மாவட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலையில் பணப்பட்டுவாடா தாமதமாக ஆரம்பித்தது. இதனால் மளமளவென கரும்பு சாகுபடி குறைய தொடங்கியது.  கடன்களை வாங்கி கரும்பு சாகுபடிக்கு ஒரு வருடம் தசகூலி செலவு செய்து, பின்னர் கரும்பு அறுவடை செய்து அதன் பின்னர் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பணம் பட்டுவாடா ஆகாமால் தனியார் சர்க்கரை ஆலைகளில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதனால் கடந்த கரும்பு சாகுபடி விவசாயிகள் கடன்களில் மூழ்கினர்.

ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு நிலங்களை உழவு செய்தல், கரும்பு விதை கர்னை வாங்குதல், நடவு, களையெடுப்பு, தொழு உரமிடுதல், ரசாயன உரமிடுதல், கரும்பில் சோகை உரித்தல், சேற்று முட்டு போடுதல் என ஒரு வருடத்திற்கு ரூ.1.5லட்சம் முதல் ரூ.2 லட்சம் செலவு செய்யப்படுகிறது. 12 மாதங்கள் கழித்து கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடிக்கு கடன் வாங்கினால் அறுவடை வரை ஒரு வருடம் விவசாயிகள் வட்டி கட்ட வேண்டியுள்ளது. இதனாலேயே பல விவசாயிகள் கரும்பு சாகுபடியினை கைவிட்டனர். தற்போது தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுள்ள பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் கரும்பு சாகுபடியினை பொறுத்தமட்டில் விவசாயிகள் தாங்கள் ஆலை அமைத்து நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் மட்டுமே அதிகளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இதில் நாட்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் இல்லாமல் சுத்தமாக சுவையான ஒரிஜினல் தயாரிப்பில் தேனி மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது. தேனி மாவட்டத்தில் மொத்த பயிர்கள் சாகுபடியில் தற்போது 5 சதவிகித்திற்கும் குறைவான பரப்பில் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது.  கரும்பு சாகுபடியினை பொறுத்து அதிக செலவு, அறுவடைக்கு அதிக நாட்கள், அதிக வேலைப்பாடுகள் என மற்ற பயிர்களை ஒப்பிடுகையில் செலவினங்கள் அதிகமாக உள்ளது.

தற்போது மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் தாங்களே சொந்தமாக தோட்டத்தில் ஆலை அமைத்து நாட்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது ஆட்சி அமைத்துள்ள அரசு விவசாயிகள் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பயிர் பாதுகாப்பு, பயிர் மேலாண்மை, விவசாயிகள் குழு, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் போதிய கடன் வசதி, விவசாயிகள் நெல் நேரடி கொள்முதல், மானிய விலையில் பண்ணை கருவிகள், வேளாண் குழுவினருக்கு மானியத்தில் பண்ணை அமைத்தல் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்து வருகின்றனர்.  ஆனால் கரும்பு விவசாயிகளை பொருத்த மட்டில் போதிய குறைந்த பட்ச ஆதார விலை என்பது கானல்நீராகவே உள்ளது.

தற்போது மாவட்டத்தில் கரும்பு ஆலை அமைத்து நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. மாவட்டத்தில் வெல்லம் கமிஷன் மண்டி, பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம், தேனி அருகே புதிப்புரம் மற்றும் சின்னமனூரில் உள்ளது. இந்த வெல்ல மண்டிகளில் அதிகளவு வியாபாரிகள் வந்தால் விலை சற்று அதிகமாக கிடைக்கும், இல்லையென்றால் குறைந்த விலையே கிடைக்கும். தற்போது 42கிலோ எடை கொண்ட ஒரு மூடை வெல்லம் ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில நேரங்களில் விலை ஏற்ற இறக்கம் காணப்படும். தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடியினை அதிகரிக்க விவசாயிகளில் ஆலைகளில் தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் சர்க்கரையை அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.100 வழங்க வேண்டும். மேலும் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு போதிய உரங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: