படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பேரகனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

கோத்தகிரி:  கோத்தகிரியில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா பேரகனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவில் கலந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் படுகர் இன மக்கள்

தங்களின் குலதெய்வ திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். விழாவில் முக்கிய நாளான நேற்று பேரகனியில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் படுகர் இன மக்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் படுகர் இன மக்கள்  தங்களின்‌ குலதெய்வமான ஹெத்தையம்மனை வழிபட்டு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற தடி எடுத்து, காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.  இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு நேற்று தமிழக அரசு  உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 திருவிழாவிற்கு அதிக மக்கள் வருவதையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பேரகனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், பாதுகாப்புக்காகவும் நீலகிரி எஸ்பி பிரபாகர் உத்தரவின் பேரில் குன்னூர் டிஎஸ்பி கோவிந்தசாமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: