சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி: அமைச்சர்கள், எம்பி, மேயர் தொடங்கி வைத்தனர்

சென்னை: தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று அமைச்சர்கள், எம்பி, மேயர் தொடங்கி வைத்தனர். சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலைத்துறை பி.கே.அமைச்சர் சேகர் பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்.

பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். 1974ம் ஆண்டு முதல் பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு மார்ச் மாதத்தில் முடிப்பது வழக்கம். நாளடைவில் ஜனவரி மாதத்தில் துவக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலா பொருட்காட்சி நடைபெறவில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று நிலையில் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இது 70 நாட்கள் நடத்தப்படும் பொருட்காட்சியில் அரசு துறைகளுக்கான அரங்குகள், பெண்கள், சிறார்களுக்கென 80க்கும் மேற்பட்ட வகையில் பல்வேறு அரங்குகள், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், திண்பண்டங்கள், உணவகங்கள், பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சியை நேற்று மாலை 5.30 மணிக்கு தொடக்கவிழா அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அதைதொடர்ந்து பொருட்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்தர மோகன், சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி மற்றும் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: