எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்: கொடைக்கானலில் பரூக் அப்துல்லா உறுதி

கொடைக்கானல்: ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா, நேற்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் இவரது தந்தை ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பாஜ அரசு, சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்னமும் தீவிரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. இவ்வாறு கூறினார். பின்னர் கோஹினூர் ஷேக் அப்துல்லா மாளிகையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து  கொண்டார்.

* மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர்

பரூக் அப்துல்லா கூறுகையில், ‘தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டு’’ என்றார்.

Related Stories: