பெண்களுக்கு சம உரிமை, மரியாதை இல்லை: பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு..!

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக நான் முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. உண்மை தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை; அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர்; நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம்; என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது. பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்; மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்க கூடாது; என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுளார்.

Related Stories: