முட்டையிட வந்த ஆமை இறந்த பரிதாபம்: மரக்காணம் கடற்கரையில் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணம் கடற்கரையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை இறந்து கிடந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமை குஞ்சுகள் பொரித்த உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். இதன் காரணமாக தான் இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இதனால் வழக்கம் போல முட்டையிட நேற்றுமுன்தினம் இரவு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை கரைக்கு வந்துள்ளது. இங்கு கரைப்பகுதிக்கு வந்த ஆமை குழி தோண்டி முட்டையிட முயற்சியும் செய்துள்ளது. ஆனால் ஏதோ காரணத்தினால் அந்த ஆமை இறந்துள்ளது. இறந்து கிடந்த ஆமையின் அருகில் முட்டைகளும் சிதறி காணப்பட்டது. இதனால் கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆமை வரும் வழியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பைபர் போட்டில் அடிபட்டு விட்டதா அல்லது கரைக்கு வந்தபோது கடற்கரையோரம் சுற்றி திரியும் நரிகள் அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: