சிங்கம்புணரியில் சிறுவர் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கம்புணரி மேலூர் சாலையில் சிறுவர் பூங்கா உள்ளது இப்பூங்கா சில மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, மின்விளக்குகள் ஆகியவை சீரமைக்கப்பட்டது. இதில் சிறுவர் பூங்காவின் நடுவில் அலங்கார நீரூற்று அமைக்கப்பட்டது. இதில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அப்பகுதி தண்ணீரால் நிரம்பி காணப்பட்டது. இதை சுற்றிலும் மூன்றடி உயரத்தில் சில்வர் பைப்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. பூங்காவை பராமரிக்க காவலர் ஒருவரும் காலை மாலை நேரங்களில் திறந்து மூடுவதற்கு பராமரிப்பாளரும் உள்ளனர்.

தற்போது அரையாண்டு விடுமுறை உள்ளதால் சிறுவர்கள் அதிக அளவில் பூங்காவில் விளையாடி வருகின்றனர். இதில் நேற்று புத்தாநத்தம் பகுதியில் இருந்து விடுமுறைக்கு உறவினருக்கு வீட்டுக்கு வந்த மூன்று வயது சிறுமி தண்ணீரில் எதிர்பாராதமாக விழுந்தது. அங்கு மணி தைக்கும் தொழிலாளர்கள் விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். கடந்த சில மாதங்களில் நான்கு சிறுவர்கள் வரை தண்ணீரில் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கம்பி வலைகளைக் கொண்டு சிறுவர்கள் தண்ணீர் பகுதிக்கு செல்லா விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் சிங்கம்புணரி நகரின் மையப்பகுதியில் உள்ள செட்டி ஊரணியில் நடைபாதை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதிலும் மூன்றடி உயரத்திற்கு மட்டுமே சில்வர் பைப்புகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலும் சிறுவர்கள் தண்ணீருக்குள் விழும் ஆபத்து உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: