மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளுடன் மாடர்னாகிறது மதுரை ரயில்வே ஸ்டேஷன்; பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்ல சுரங்கப்பாதை; புதிதாய் நடை மேம்பாலம், நவீன காத்திருப்பு அறை; மளமளவென வேகமெடுக்கும் மறுசீரமைப்பு பணி

மதுரை: மல்டி லெவல் பார்க்கிங் உட்பட மாடர்ன் வசதிகளுடன், மதுரை ரயில்வே ஸ்டேஷனை ரூ.347.47 கோடி செலவில் மறு சீரமைக்கும் பணிகள் வேகமடைந்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில், மதுரை உட்பட 9 ரயில் நிலையங்கள் மறு உருவாக்கம் பெற இருக்கின்றன. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 96 ரயில்கள் கையாளப்படுகின்றன. அதிகபட்சமாக தினந்தோறும் சுமார் 51,296 பயணிகள் வந்து செல்கின்றனர் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரூ.347.47 கோடி மதிப்பிலான மறு சீரமைப்பு பணிக்கு சென்னை தனியார் நிறுவனத்திற்கு செப். 22ல் ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். மும்பை தனியார் திட்ட மேலாண்மை சேவை நிறுவனம் இப்பணிகளை கண்காணிக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு, மேற்கு புறங்களில் நவீன வசதிகளுடன் இரு முனையங்கள் அமைகின்றன. கிழக்கு நுழைவாயிலில் இரு அடுக்கக, மேற்கு நுழைவாயிலில் ஒரு அடுக்கக வாகன காப்பகங்கள் என 3 வாகன காப்பகங்கள் அமைகின்றன. ரயில் நிலையத்தையும், பெரியார் பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை, பார்சல்களை கையாள தனி மேம்பாலம், கிழக்குப் பகுதியில் உள்ள வாகன காப்பகங்களுக்கு செல்ல இரு நடை மேம்பாலங்கள் அமைகின்றன. கிழக்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் 2 மாடி கட்டிடமாக 22,576 சதுர மீட்டரில் அமைகிறது.

தரை தளத்தில் வருகை, புறப்பாடு பயணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எளிதாக சென்று வரும்படி வசதிகள் செய்யப்பட உள்ளது. கழிப்பறைகள், பொருள் வைப்பறைகள், குழந்தைகளுக்கான வசதிகள், பாலூட்டும் அறைகள், உதவி மையங்கள், பயணிகள் பயன்பாட்டு வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்களும் அமைகின்றன. முதல் தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறைகள், உணவகங்கள், சிறு வணிகக் கடைகள், கழிப்பறைகள் அமைகிறது. 2வது தளம் வணிக வளாக பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.

மறு சீரமைப்பில் முக்கிய அம்சமாக கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடங்களை இணைத்து ரயில் பாதைகளுக்கு மேலாக பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைகிறது. இந்த அரங்கில் இருந்து பயணிகள் எளிதாக தங்களது நடைமேடைகள் சென்றுவர இரு ஜோடி எஸ்கலேட்டர்கள், இரு லிப்ட்கள், 4 நடை மேம்பால படிக்கட்டுகளும் அமைகின்றன. இந்த அறையில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் நடைமேடைகளில் வரும் ரயில்களை காணும் வகையிலும் அமைகிறது. தற்போதைய மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் வசதிகளுடன் இரு மாடி கட்டிடமாக அமைகிறது.

இந்த கட்டிடத்தில் வருகை புறப்பாடு, பயணிகளுக்கு தனித்தனி பகுதிகள், பயண சீட்டு அலுவலகங்கள், ரயில்வே சேவை அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை அமைகின்றன. கிழக்கு நுழைவாயில் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தரைத்தளத்திற்கு மேல் இரு தளங்கள் கொண்ட 9,430 சதுர மீட்டர் வாகன காப்பகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தரை தளத்திற்கு மேல் மூன்று தளங்கள் கொண்ட 2,822 சதுர மீட்டர் வாகன காப்பகம் அமைகிறது. மேற்கு நுழைவாயிலில் தரைத்தளத்திற்கு மேல் ஒரு தளத்துடன் 2,580 சதுர மீட்டரில் வாகன காப்பகம் அமைகிறது. அனைத்து வாகனங்களும் ரயில் நிலையப் பகுதியில் சிக்கல் இல்லாமல் சென்று வரும் வகையில் முகப்பு சாலைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயில்நகர், தூங்கா நகர் பெருமைக்குரிய தொன்மைப் பெருமைக்குரிய மதுரை நகரத்து ரயில் நிலையம், பழமையுடன், நவீனமும் கலந்ததாக புதுப்பிக்கப்படுகிறது. அழகுடன், கூடுதல் வசதிகளும் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்படுகிறது’’ என்றார்.

Related Stories: