நிறுத்தப்பட்ட அரசு, தனியார் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்: அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடந்து வருகிறது. நேற்று நடந்த குறைதீர்வு முகாமில் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனு பெற்றார். இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சி தலைவர் எஸ்.பிரமிளா கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார். அதில், நல்லாத்தூர் ஊராட்சியில் கடந்த 1993ல் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

மழை காலங்களில் மேற்கூரை சிதிலமடைந்துள்ளதால் ஒழுகுகிறது. ஆவணங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த ஊராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரேஷன் கடை இடிந்து விழுந்து விட்டது. இதனால் வாடகை கட்டித்தில் இடநெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதுபோல் கொந்தகாரிகுப்பம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிறுவர்களின் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தரவேண்டும். மேலும் 50 வருடங்களாக கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுப்பட்டினம், வாயலூர், நல்லாத்தூர், பொம்மராஜபுரம், பனங்காட்டுச்சேரி, கொந்தகாரிகுப்பம், நெரும்பூர், திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டு,

சென்னைக்கு சென்று வந்த 4 பேருந்துகள், புதுப்பட்டினத்தில் இருந்து வாயலூர், நல்லாத்தூர் வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு சென்று வந்த 2 தனியார் பேருந்துகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு அரசு பேருந்து மட்டும் நாளொன்றுக்கு 2 முறை இயக்கப்படுகிறது. இதனால் வாயலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்ற அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: